சனி, 23 ஜூலை, 2011

இஸ்லாமியாஃபோபியா:முஸ்லிம் இளைஞருக்கு துபாய் செல்ல அனுமதி மறுப்பு


  images
கோழிக்கோடு:இச்சம்பவம் நியூயார்க்கிலோ, லண்டனிலோ, டெல் அவீவிலோ நடக்கவில்லை. கடவுளின் சொந்த நாடு (God’s own country) என்றழைக்கப்படும் கேரளாவில் நடந்த சம்பவம். துபாய் செல்வதற்கு விமான நிலையத்திற்கு வந்த முஸ்லிம் இளைஞர் ஒருவரை துபாய் செல்வதற்கு எமிக்ரேசன் (குடிபெயர்வு) அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர். காரணம் வேறொன்றுமில்லை அவரது தாடிதான் பிரச்சனை.
கேரள மாநிலத்தின் வடமாவட்டமான காஸர்கோட்டிலிருந்து 150 கி.மீ பயணித்து மலப்புறம் மாவட்டத்தில் அமைந்துள்ள கரிப்பூர் விமான நிலையத்திற்கு தனது தாயாருடன் விசிட்டிங் (சுற்றுலா) விசாவில் செல்வதற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வருகை தந்தார் முஹம்மது இக்பால். இவர்களது சுற்றுலா விசாவை அனுப்பியவர் இக்பாலின் சகோதரர் ஆவார். செல்லவிருந்த விமானம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகும்.
எமிக்ரேசன் பகுதிக்கு சென்ற இவரது தாயாரின் பாஸ்போர்ட் மற்றும் விசிட்டிங் விசா நகலை சரிபார்த்த அதிகாரிகள் உள்ளே செல்ல அனுமதி அளித்தனர். ஆனால் இக்பாலை அனுமதிக்கவில்லை. அதற்கு அவர்கள் கூறிய காரணம் அவரது உடல் தோற்றமாம். இக்பாலுக்கு எதுவும் புரியவில்லை. உடனே அவர் அதிகாரிகளிடம் ‘எனது தாடியையா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்? என வினவ. ‘அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்’ என பதிலளித்துள்ளனர் அதிகாரிகள்.
இதனைத் தொடர்ந்து அதிகாரிகளுக்கும் இக்பாலுக்கும் இடையே சூடான விவாதம் நடந்துள்ளது.  இறுதியில் தங்களது நிலையை நியாயப்படுத்த இக்பாலின் விசிட்டிங் விசா ஒரிஜினல்(அசல்) அல்ல எனக்கூறியுள்ளனர். உடனே இக்பால்,’எனது தாயாருடைய விசிட்டிங் விசாவும் ஒரிஜினல் அல்ல நகல்தான்’ என பதிலளித்துள்ளார். (ஆன்லைன் விசிட்டிங் விசாவை பொறுத்தவரை ப்ரிண்டட் காப்பி செல்லத்தக்கதாகும்). உடனே கோபமடைந்த அதிகாரி, “யாருக்கு அனுமதி கொடுக்க வேண்டும் யாருக்கு அனுமதி கொடுக்கக்கூடாது என்பதை முடிவு செய்ய எனக்கு அதிகாரம் உள்ளது” என பதிலளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இக்பாலும் அவரது தாயாரும் வேறு வழியில்லாமல் மீண்டும் 150 கி.மீ தொலைவில் உள்ள தங்களது வீட்டிற்கு திரும்பி சென்றுள்ளனர். இக்பால் தனக்கு ஏற்பட்ட வித்தியாசமான அனுபவத்தைக் குறித்து கேரள மாநில முதல்வருக்கும், உயர் அதிகாரிகளுக்கும் புகார் அளித்துள்ளார்.
நன்றி : தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக