புதன், 5 ஜனவரி, 2011

பலாத்காரம் செய்யப்பட்ட பெண் பழி வாங்கினார் பா.ஜ.க. எம்.எல்.ஏ. குத்திக் கொலை

புர்னியா : வீட்டில் பொதுமக்களிடம் மனு வாங்கிக் கொண்டிருந்த பா.ஜனதா எம்.எல்.ஏ.வை ஒரு பெண் கத்தியால் குத்திக் கொன்றார். பலாத்காரம் செய்ததற்கு பழிவாங்கவே  எம்.எல்.ஏ.வை  கொலை செய்ததாக அவர் கூறியுள்ளார். நேற்று பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் பீகாரில் பதற்றம் நிலவுகிறது.

பீகாரில் புர்னியா மாவட்டத்தில் உள்ள புர்னியா தொகுதியின் பா.ஜனதா எம்.எல்.ஏ. ராஜ்கிஷோர் கேசரி (51). புர்னியாவில் சிப்பாகி தோலாவில் இவருடைய வீடு உள்ளது. நேற்று காலை இவர் தனது வீட்டில் தொகுதி மக்களிடம் மனு வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு பெண் திடீரென அங்கு வந்து அவருடைய வயிற்றில் கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் அவருடைய குடல் சரிந்தது. ரத்தம் பீறிட்டது. அலறியபடி கீழே விழுந்து துடித்தார்.

என்ன நடந்தது என்றே சில நிமிடங்கள் யாருக்கும் தெரியவில்லை. பின், தொண்டர்கள் ஆத்திரமடைந்து, அந்த பெண்ணை பலமாக தாக்கினர். அதே நேரம், கேசரியை மருத்துவமனைக்கு சிலர் தூக்கிச் சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். கத்தியால் குத்திய ரூபம் ஆசிரியை. காயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது நிலையும் கவலைக்கிடமாக உள்ளது. இந்த பெண் ஏற்கனவே கேசரி தன்னை பலாத்காரம் செய்து விட்டதாக போலீசில் புகார் கொடுத்திருந்தார்.

கேசரி கொல்லப்பட்டதால் புர்னியா மாவட்டத்தில் பதற்றம் நிலவுகிறது. அசம்பாவிதத்தை தடுக்க போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். கேசரி கொல்லப்பட்டது பற்றி விரிவான விசாரணை நடத்தவும், எம்.எல்.ஏ.க்களை சந்திக்க வருபவர்களிடம் சோதனை நடத்தும்படியும் டி.ஜி.பி.க்கு முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். கட்சிகள் கண்டனம்: கேசரி படுகொலைக்கு பா.ஜ, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், லோக் ஜனசக்தி உட்பட பல்வேறு கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. எம்.எல்.ஏ.க்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்த அரசை வலியுறுத்தி உள்ளன. பா.ஜ. மாநிலத் தலைவர் சி.பி.தாக்கூர் கூறுகையில், ‘சிறந்த தொண்டரை பா.ஜ. இழந்து விட்டது. சம்பவம் பற்றி விரிவாக விசாரிக்க வேண்டும்என்றார்.

காங்கிரஸ் மாநிலத் தலைவர் மிஸ்ரா கூறுகையில், ‘ரூபம் கொடுத்த பலாத்கார புகாரை போலீசார் சரியாக விசாரித்திருந்தால், கேசரியின் படுகொலையை தவிர்த்திருக்கலாம். அந்த பெண்ணுக்கு நீதி மறுக்கப் பட்டதால் கொலை நடந்துள்ளது. சம்பவம் பற்றி நீதி விசாரணை நடத்த வேண்டும்என்றார்.லாலு கூறுகையில், ‘கேசரி கொல்லப்பட்டது வெட்கக்கேடானது. இது மாநிலத்தின் கவுரவத்தை சீர்குலைத்து விட்டது. படுகொலை பற்றியும், ரூபம் பதக்கின் குற்றச்சாட்டு பற்றியும் விசாரணை நடத்த வேண்டும்’’ என்றார்.

தூக்கில் போடுங்கள்; கொலையாளி கதறல்

தொண்டர்களால் தாக்கப்பட்ட கொலையாளி ரூபம் பதக், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரித்த போது, ‘நான் வாழ விரும்பவில்லை. என்னை தயவு செய்து தூக்கில் போடுங்கள்என்று கதறினார்.



நன்றி: தினகரன்- ௦05.01.11

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக