சனி, 19 மார்ச், 2011

ஸ்ரீரங்கம் அக்ரஹாரத்தில் தங்கி பிரசாரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா,

திருச்சி: ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடவுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அங்குள்ள அக்ரஹாரத்தில் தங்கி பிரசாரத்தில் ஈடுபடலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பிராமணர்கள் நிறைந்துள்ள ஸ்ரீரங்கத்தில் இந்த முறை போட்டியிடவுள்ளார் ஜெயலலிதா. இதற்காக அவர் ஸ்ரீரங்கத்தில் தங்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

எந்த ஒரு செயலையும் ஜோதிடர்களைக் கேட்டு விட்டே செய்யும் பழக்கம் உடையவர் ஜெயலலிதா. தான், ஸ்ரீரங்கத்தில் எங்கு தங்குவது என்பது குறித்தும் அவர்களிடம் ஆலோசனை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களும், பிராமண அக்ரஹாரத்தில் தங்கி பிரசாரத்தில் ஈடுபட்டால் நல்ல பலன் கிடைக்கும் என்று கூறியுள்ளார்களாம்.

இதையடுத்து ரங்கநாதர் கோவிலைச் சுற்றிலும் நான்கு வீதிகளில் நிறைந்துள்ள அக்ரஹாரத்தை அதிமுகவினர் அலசி ஒரு வீட்டைப் பார்த்து வைத்துள்ளனராம்.

ஆனால் ஜெயலலிதா அக்ரஹாரத்தில் தங்கினால் பாதுகாப்பு தருவது சிக்கலாகும் என்று காவல்துறை கூறியுள்ளதாம். இதனால் வேறு சில இடங்களிலும் பங்களாக்களைப் பார்த்து வைத்துள்ளதாம் அதிமுக.

இருப்பினும் அக்ரஹாரத்தில் தங்கினால் நல்லது என்று ஜோதிடர்கள் திட்டவட்டமாக கூறியுள்ளதால் அக்ரஹாரத்தில் உள்ள ஒரு வீட்டை எடுத்து அதை தொகுதி தேர்தல் அலுவலமாக மாற்றியுள்ளனர்.வீட்டி்ல தங்காவிட்டாலும் இங்கு வந்து போனாலே சென்டிமென்ட்டாக ஒர்க்அவுட் ஆகுமே என்ற காரணத்தில்தானாம்.

பெரும் கோடீஸ்வரரான திமுக வேட்பாளர்:

இந்தத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் 29 வயதான ஆனந்தன், இதே தொகுதிக்குட்ப சந்தாபுரத்தைச் சேர்ந்தவர். அமைச்சர் நேருவின் சிபாரிசுடன் சீட்டை வாங்கியுள்ள இவருக்கு பல நூறு ஏக்கர் விவசாய நிலங்கள், பழ மண்டிகள் உள்ளன.

இப் பகுதியின் பெரும் கோடீஸ்வர குடும்பத்தைச் சேர்ந்த இவரை நேரு சிபாரிசு செய்யக் காரணம் அவரது ஜாதியான முத்தரையர் சமூகத்தினர் இந்தத் தொகுதியில் பெருவாரியாக வசிப்பதால் தானாம்.

ஜெயலலிதா பிராமண சமூகத்தினரின் ஓட்டுக்களை குறி வைக்க, தொகுதியில் அவர்களை விட அதிகம் வசிக்கும் முத்தரையர் ஜாதியினர் ஓட்டுக்களைக் குறி வைத்து ஆனந்தனை இறக்கியுள்ளார் நேரு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக