சனி, 12 மார்ச், 2011

ஜப்பானின் ஃபுகுஷிமா அணு உலையில் வெடி விபத்து-கதிர்வீச்சு வெளியாகும் நிலையில் உள்ளது

Japan Fukushima Nuclear Power Plant
டோக்கியோ: மிகப் பெரிய பூகம்பம் மற்றும் சுனாமி பேரலைகள் காரணமாக ஜப்பானின் 5 முக்கிய அணு உலகைகள் பேராபத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணு உலைகளில் இரண்டு உலைகளில் குளிரூட்டும் கருவிகள் செயல்படாமல் போனதால் வெப்பம் மிகவும் அதிகரித்து கதிர்வீச்சு வெளியாகும் நிலையில் உள்ளதால், அந்தப் பகுதிகள் முழுவதும் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பல ஆயிரம் மக்கள் இந்த அணு உலைகள் அமைந்துள்ள பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.
இவற்றில் ஏதாவது ஒரு அணு உலை வெடித்தாலும், ரஷ்யாவின் செர்னோபில் அணு உலை வெடித்த போது ஏற்பட்டதைவிட பல மடங்கு அதிக சேதத்தை ஜப்பானும் அதனைச் சுற்றியுள்ள நாடுகளும் அனுபவிக்க நேரிடும் என்பதால், மக்கள் பெரும் பீதியில் உறைந்துள்ளனர்.

ஃபுகுஷிமா பகுதியில் உள்ள பெரிய அணு உலையில் வெப்ப நிலை மிக பயங்கரமாக அதிகரித்தது. இதனால் உலையின் உள்ளே அழுத்தமும் கதிர்வீச்சும் 1000 மடங்கு அதிகரித்து அது வெடிக்கும் அபாயம் ஏற்பட்டது. டோக்கியோவிலிருந்கு 170 கிமீ தொலைவில் உள்ளது இந்த அணு உலை. ஆனால், கடும் முயற்சிகளுக்குப் பிறகு அதன் அழுத்த நிலை இன்று காலை குறைக்கப்பட்டதாக ஜப்பான் அறிவித்துள்ளது.

இந் நிலையில் இந்த அணு உலையில் இன்று காலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அணு உலையின் கூரைப் பகுதி சிதறியது. அதே போல அந்த அணு மின் நிலையத்தின் வெளிப்புற சுவரும் இடித்து விழுந்தது. வெடி விபத்தைத் தொடர்ந்து அப் பகுதியில் பெரும் புகை மண்டலமாகக் காட்சிளிக்கிறது.

இந்த விபத்தில் 4 பேர் காயமடைந்ததாகவும், சிறிய அளவில் கதிர்வீச்சும் கசியத் தொடங்கியுள்ளதாகவும் ஜப்பான் அறிவித்துள்ளது. அதே நேரத்தில் கதிர்வீ்ச்சின் அளவு அச்சப்படும் அளவுக்கு இல்லை என்றும் அதை உடனடியாகக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

முன்னதாக அப்பகுதியில் இருந்த 3000க்கும் அதிகமான மக்கள் அலறியடித்துக் கொண்டு வேறு பகுதிகளுக்குச் சென்றனர்.

முன்னதாக இந்த அணு உலையைக் குளிர்விப்பதற்கான கருவிகளை அமெரிக்கா அனுப்பி வைத்திருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் வடக்கு ஜப்பானின் கடலோரப் பகுதியில் இருக்கும் ஓனகவா அணு மின் நிலையத்தின் வெளிப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து அந்தப் பகுதியில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவை தவிர மேலும் 3 அணு உலைகள் ஆபத்தான கட்டத்தில் உள்ளதாகவும், இந்தப் பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேறி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுனாமி பாதிக்கப்பட்ட பகுதிகளை ஒட்டியுள்ள மேலும் 6 அணு உலைகள் மூடப்பட்டன. அங்கெல்லாம் அணு உலைகள் குளிர்ந்த நிலையில் வைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் அறிவித்துள்ளது.

ஜப்பானில் தொடரும் நிலநடுக்கம்-மீண்டும் சுனாமி பீதி:
  Read:  In English 
இந் நிலையில் இன்று அதிகாலை மத்திய ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானது. ஜப்பானில் தொடர்ந்து அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் நிலநடுக்கத்தால் மீண்டும் சுனாமி தாக்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் மீட்பு பணிக்கு உதவ 45 நாடுகள் முன்வந்துள்ளன. நிவாரண உதவிகள் வழங்க இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக