ஞாயிறு, 1 மே, 2011

சமரசத்திற்கு தயார்:ஆனால் பதவி விலகமாட்டேன் – கத்தாஃபி

  kadafiதிரிபோலி:லிபியாவின் மீது மேற்கத்திய படையினர் கடுமையான தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கும் வேளையில் சமரசப்பேச்சுவார்த்தைக்கு தயார் என லிபிய அதிபர் முஅம்மர் கத்தாஃபி அறிவித்துள்ளார்.பல வாரங்களாக தொடரும் கத்தாஃபி எதிர்ப்பு போராட்டங்களுக்கும்,மேற்கத்திய படையினரின் தாக்குதல்களுக்கும் இடையே நேற்று காலை அரசு அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியில் தோன்றி பேட்டியளித்த முஅம்மர் கத்தாஃபி மேற்கத்திய படையினரை கடுமையாக விமர்சித்தார்.அவர் கூறியதாவது:நான் அதிகாரத்திலிருந்து விலகி  நாட்டை விட்டு செல்ல விரும்பவில்லை.லிபியா போர் நிறுத்தத்திற்கு தயாராக உள்ளது.ஆனால்,இது ஒரு பக்கத்திலிருந்து மட்டும் உருவாகக்கூடாது.


நீங்கள்தாம் பயங்கரவாதத்தி உருவாக்குகின்றீர்கள்.எங்களின் குழந்தைகளை குண்டுவீசி கொல்கின்றீர்கள்.நாட்டின் அடிப்படை வசதிகளை குண்டுவீசி அழிக்கின்றீர்கள்.அமெரிக்கரும், பிரான்சு நாட்டவரும், பிரிட்டீஷாருமாகிய நீங்கள் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வாருங்கள்.மேற்கத்திய படையினர் தாக்குதலை நிறுத்தினால் எங்களுக்கு உள்நாட்டு பிரச்சனையை சமாளிக்க இயலும்.நாம் அவர்களை தாக்கவில்லை.எல்லையை கடக்கவும் இல்லை.பின்னர் ஏன் மேற்கத்திய நாடுகள் லிபியாவை குறிவைக்கின்றன.

லிபியாவை தாக்கும் நாடுகளுடன் சமரசபேச்சுவார்த்தைக்கு தடையில்லை.நேட்டோவின் தாக்குதல்களை நிறுத்த ஐக்கியநாடுகள் சபை தலையிடவேண்டும்.சமாதானத்தின் வாசல் திறந்து கிடக்கிறது.இவ்வாறு கத்தாஃபி உரையாற்றினார்.அவரது உரை 80 நிமிடங்கள் நீடித்தது.அதேவேளையில், கத்தாஃபி உரை நிகழ்த்திக்கொண்டிருக்கும்பொழுது நேட்டோ படையினர் லிபியாவின் செய்தி ஒளிபரப்பு அமைச்சகத்தின் கட்டிடத்திற்கு அருகே குண்டுவீசி தாக்குதல் நடத்தினர்.கத்தாஃபியை குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக