சனி, 23 ஏப்ரல், 2011

குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையில் மோடிக்கு பங்கு – குஜராத் மாநில உயர் போலீஸ் அதிகாரி அளித்துள்ள பிரமாணப்பத்திரம்

  modiofficerbhatt295
அஹ்மதாபாத்:2002-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த கொடூரமான முஸ்லிம் இனப் படுகொலையில் அம்மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கு பங்குண்டு என உயர் போலீஸ் அதிகாரியொருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
இனப் படுகொலையின் மூலமாக ஹிந்துக்களின் கோபத்தை தணிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தவும், முஸ்லிம்களுக்கு பாடம் கற்பிக்கவும் மோடி மூத்த போலீஸ் அதிகாரிகளின் கூட்டத்தில் வலியுறுத்தினார் என சுட்டிக்காட்டி ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் சமர்ப்பித்துள்ளார்.
இனப் படுகொலையின் போது கொடூரமாக கொல்லப்பட்ட முன்னாள் காங்கிரஸ் கட்சியின் எம்.பி இஹ்ஸான் ஜாப்ரியின் வழக்கில்தான் பட் கடந்த 14-ஆம் தேதி வாக்குமூலம் அளித்துள்ளார். இவ்வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழுவின் மீது நம்பிக்கையில்லாததால் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராகி பிரமாணப்பத்திரம் அளிப்பதாக சஞ்சீவ் பட் தெரிவித்துள்ளார்.
குஜராத் அரசை வழக்கிலிருந்து தப்பிக்க உதவ எஸ்.ஐ.டி முயலுவதாக சஞ்சீவ் பட் சுட்டிக்காட்டியுள்ளார்.
முஸ்லிம் இனப் படுகொலையின் போது குஜராத் மாநில ரகசிய புலனாய்வு பிரிவில்(எஸ்.ஐ.பி) டி.சி.பியாக பதவி வகித்தவர் சஞ்சீவ் பட். 1998-ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் பாட்சை  சார்ந்தவர். டி.ஐ.ஜி ராங்கிலுள்ள அவர் தற்போது மாநில ரிசர்வ் போலீஸ் படை பயிற்சி மையத்தின் தலைவராக இருக்கிறார். சத்திய வாக்குமூலம் வெளியான சூழலில் தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்கவேண்டுமென அவர் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
2002 பிப்ரவரி 27-ஆம் தேதி கூடிய போலீஸ் அதிகாரிகளின் கூட்டத்தில் முஸ்லிம் இனப் படுகொலையை தீவிரமாக்குவதற்கான உத்தரவுகளை மோடி பிறப்பித்துள்ளார். அக்கிரமங்களை கட்டவிழ்த்துவிடுவோர் மீது எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளக்கூடாது என அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். தாக்குதலுக்கு ஆளானவர்கள் உதவி கேட்டு அழைக்கும் பொழுது அதனை அலட்சியம் செய்யுமாறும் மோடி உத்தரவிட்டார் என சஞ்சீவ் பட் அளித்துள்ள பிரமாணபத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
நீண்டகாலமாக ஹிந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்குமிடையே நடுநிலையாக நடந்துவருகிறது போலீஸ். ஆனால், இம்முறை முஸ்லிம்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கவும், ஒருபோதும் இதுமாதிரியான (கோத்ரா ரெயில் எரிப்பு) சம்பவங்கள் நிகழக்கூடாது. ஹிந்துக்களிடையே கோபம் பற்றி எரிகிறது என போலீஸ் அதிகாரிகளின் கூட்டத்தில் மோடி கூறியுள்ளார் என தெரிவிக்கிறார் சஞ்சீவ் பட்.
மோடியின் வீட்டில் நள்ளிரவில் நடந்த கூட்டத்தில் சஞ்சீவ் பட் உள்பட எட்டு மூத்த போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
சத்திய வாக்குமூலத்தை எஸ்.ஐ.டியிடம் வழங்காமல், உச்சநீதிமன்றத்தில் நேரடியாக சமர்ப்பிக்க என்ன காரணம்? என சஞ்சீவ் பட்டிடம் கேள்வி எழுப்பப்பட்டதற்கு அதற்கான பதில் பிரமாணபத்திரத்தில் விவரித்துள்ளதாக சஞ்சீவ் பட் பதிலளித்துள்ளார்.
‘ரகசிய புலனாய்வு அதிகாரியான எனக்கு மோடியின் உத்தரவுகளை குறித்து தெளிவாக தெரியும். சட்டரீதியான கடமை இருப்பதால் பணியின் காரணமாக இத்தகைய சம்பவங்களை வெளிப்படுத்தாமலிருப்பது சரியல்ல’ என அவர் தெரிவித்தார். ஆனால், உச்சநீதிமன்றத்தில் நேரடியாக அளித்த பிரமாண பத்திரம் கசிந்ததில் சஞ்சீவ் பட் அதிர்ச்சியை வெளியிட்டார். ‘கூட்டத்தில் பங்கேற்க யார் கட்டளையிட்டார்கள்? யாருடன் கூட்டத்திற்கு சென்றீர்கள்? ஆகியவற்றை பிரமாணபத்திரத்தில் தெரிவித்துள்ளேன். எஸ்.ஐ.டிக்கும், நீதிமன்றத்திற்கும் தேவையான உண்மை அதில் உள்ளது’ என சஞ்சீவ் பட் தெரிவித்தார்.
வருகிற 27-ஆம் தேதி இதர ஆவணங்களுடன், சஞ்சீவ் பட் அளித்துள்ள சத்திய வாக்குமூலமும் பரிசீலிக்கப்படும். ‘இத்தகைய விபரங்களை எஸ்.ஐ.டியிடம் தெரிவித்திருந்தேன். ஆனால், கிடைத்த விபரங்களின் அடிப்படையில் செயல்படாமல், குஜராத் அரசை பாதுகாப்பதற்கு எஸ்.ஐ.டி முயன்றதாக பிரமாணபத்திரத்தில் விவரித்துள்ளேன்.’
மூத்த போலீஸ் அதிகாரி மோடியின் உத்தரவுகளை கண்ணை மூடிக்கொண்டு செயல்படுத்தினார் என சஞ்சீவ் பட் தனது பிரமாணப்பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 27-ஆம் தேதி நடந்த கூட்டத்தில் ஜூனியர் அதிகாரியாக இருந்ததால் சஞ்சீவ் பட் பங்கேற்கவில்லை என எஸ்.ஐ.டி விசாரணை செய்யும் வேளையில் மோடி வாக்குமூலம் அளித்திருந்தார். முன்னாள் சி.பி.ஐ தலைவர் ஆர்.கே.ராகவன் தலைமையில் எஸ்.ஐ.டி மார்ச் 21,22,23 ஆகிய தேதிகளில் சஞ்சீவ் பட்டிடம் விரிவாக விசாரணை நடத்தியிருந்தது.
புதிய தகவல்கள் வெளியான சூழலில் மோடியும், பா.ஜ.கவும் நாட்டிற்கு பதில் அளிக்கவேண்டுமென காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. மோடிக்கு புகழாரம் சூட்டுபவர்கள் சஞ்சீவ் பட்டின் பிரமாணப்பத்திரத்தை வாசிக்கட்டும் என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மனிஷ் திவாரி தெரிவித்துள்ளார்.

www.thoothuonline.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக