புதன், 27 ஏப்ரல், 2011

ஐரோப்பா பெண்கள் பெற்றிருப்பது சுதந்திரமா?

சமீபத்தில் இணையச் செய்தி ஒன்றைப் படிக்க நேர்ந்தது. அதில் இஸ்லாமும் மற்ற மதங்களைப் போலவே பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கின்றது என்று மக்கள் கலை இலக்கியக் குழுவைச் சேர்ந்த நண்பர்கள் விமர்சனம் எழுதி இருந்தார்கள்.
 
அவர்களது விமர்சனத்திற்குப் பதில் கூறுமுகமாகவும், இஸ்லாத்தில் உள்ள பெண்களின் உரிமைகள் பற்றியும், அந்த உரிமைகள் யாவும் அவர்கள் கேட்டுப் பெற்றதோ அல்லது போராடிப் பெற்றதோ அல்ல என்றும், ஆனால் 1400 வருடங்களாக இன்னும் சொல்லப் போனால், பெண்களை இன்னும் போகப் பொருளாகவும், கடைச்சரக்காகவும், பண்டமாற்றைப் போலவும் அவர்களை நடத்தி வரும் சமூகங்களுக்கு மத்தியில் இஸ்லாம் அவர்களை எந்தளவு கண்ணியமான இடத்தில் வைத்துள்ளது என்பது புரிய வரும். இஸ்லாம் அவர்கள் மீது விதித்துள்ள கட்டுப்பாடுகள் யாவும், அவர்களின் பெண்மைக்கு இயைந்த மற்றும் பாதுகாப்பு என்ற நிலையிலே அல்லாது, அவர்கள் பெண்கள் என்ற காரணத்திற்காக என்றுமே அவர்களை தாழ்த்தி வைத்ததில்லை மற்றும் அடக்கி வைத்ததில்லை என்பதை சகோதரர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக இந்தக் கட்டுரையைத் தருகின்றோம்.

செய்தித்தாள்களில் நம் கவனத்தைச் செலுத்தினோம் என்றால், உலகப் பெண்கள் தினம், பெண்கள் அடையாள ஊர்வலம், பெண்கள் உரிமை கேட்டுப் போராட்டம், பெண்கள் கோரிக்கை தினம் என பல்வேறு தலைப்புகளில் உலகப் பெண்களின் உரிமைகள், போராட்டங்கள் பற்றிய செய்திகளை நாம் பார்க்கலாம்.

என்ன இது அநியாயம்? பெண்கள் அனைவரும் முழுச் சுதந்திரம் பெற்று விட்டார்கள். பெண்கள் இன்று சுவாசிக்கின்றார்கள் என்றால் அந்த சுவாசக் காற்றில் சுதந்திரத்தைக் கலந்து விட்டதே நாங்கள் தான் என மார்தட்டிக் கொள்ளும் இன்றைய மேலைநாடுகளிலும் சரி , இந்தியா போன்ற நாடுகளிலும் சரி பெண்கள் தினத்தன்று பெண்கள் மீண்டும் கோரிக்கைப் பேரணி நடத்துகிறார்கள் என்றால் அவர்கள் இன்னும் முழுச் சுதந்திரம் பெறவில்லை என்று அல்லவா கருத வேண்டியுள்ளது? எனவே இது பற்றியதொரு மீள் பார்வையும், குற்றம் சாட்டியே பழக்கப்பட்டுப் போன இஸ்லாமிய எதிர்வாதம் புரியும் மக்களுக்கு விளங்கும் வகையிலும், இன்று போராடும் இந்த பெண்கள் போராட்டத்தின் கால அளவு என்ன என்பதையும், அதே நேரத்தில் போராட்டம் இன்றியே 14 நூற்றாண்டுகள் முன்னால் முஸ்லிம் பெண்கள் சுதந்திரம், சமூக, பொருளாதார நிலைகளில் எவ்வாறு அடைந்தனர் என்பதை ஞாபகமூட்ட வேண்டிய அவசியமும் உண்டாகிறது.

பெண்களும் மற்ற மதங்களும்

இஸ்லாத்தில் பெண்களுக்கு இருக்கின்ற உரிமைகள் பற்றிப் பேசுவதற்கு முன் பெண்களை மற்ற சமூகத்தினர் எப்படி நடத்திக் கொண்டிருந்தார்கள் என்பதைத் தெளிவுபடுத்துவது அவசியமாகும்.

கிரேக்கர் பெண்களை வியாபாரப் பொருட்களாகவே கருதினர். அவர்களுக்கென எந்த உரிமையும் கிடையாது. உரிமைகள் அனைத்தும் ஆண்களுக்கே என்றனர். இன்னும் அப்பெண்களுக்குச் சொத்துரிமை, கொடுக்கல், வாங்கல், போன்ற உரிமைகள் தடுக்கப்பட்டிருந்தன. அவர்களில் பிரபல்யமான தத்துவ ஞானி சாக்ரடீஸ் என்பவர் பெண்கள் இருப்பது உலகின் வீழ்ச்சிக்கு மிகப் பெரும் மூல காரணமாகும். மேலும் பெண்கள் விஷமரத்திற்கு ஒப்பானவர்கள். அம்மரத்தின் புறத்தோற்றம் அழகாக இருக்கும். எனினும் அதன் கனிகளை சிட்டுக் குருவிகள் தின்றவுடனேயே இறந்து விடுகின்றன என்று கூறியுள்ளார்.

ரோமானியர்கள் பெண்களை உயிரற்ற பொருளாகவே கருதி வந்துள்ளனர். அவர்களிடம் பெண்களுக்கு எந்த மதிப்பும் உரிமையும் இருந்ததில்லை. பெண்கள் உயிரற்ற பொருளாகக் கருதப்பட்டதால் தான் அவர்களைக் கொதிக்கின்ற எண்ணெணை ஊற்றியும், தூண்களில் கட்டியும் வேதனை செய்தார்கள். இது மட்டுமின்றி குற்றமற்ற பெண்களை குதிரைகளின் வால்களில் கட்டி அவர்கள் மரணித்து போகின்ற அளவிற்கு மிக விரைவாக ஓட்டி விடுவார்கள்.

பெண்கள் விஷயத்தில் இந்தியர்களின் கண்ணோட்டமும் இவ்வாறு தான் இருந்துள்ளது. அவர்கள் இன்னும் ஒரு படி அதிகமாக கணவன் இறந்து விட்டால் அவனின் சிதையுடன் மனைவியையும் எரித்து விடுபவர்களாகவும் இருந்திருக்கின்றனர்.

சீனர்கள் பெண்களை நற்பாக்கியத்தையும், செல்வங்களையும் அழித்து விடக் கூடிய தண்ணீருக்கு ஒப்பாக்கினர். அவர்கள் தம் மனைவியரை உயிரோடு புதைத்து விடுவதற்கும் விற்று விடுவதற்கும் உரிமை பெற்றிருந்தனர்.

பெண்கள் சாபத்திற்குரியவர்களென யூதர்கள் கருதுகின்றார்கள். ஏனெனில் அவள் தான் ஆதம் அவர்களை வழிகெடுத்து மரக் கனியை சாப்பிடச் செய்து விட்டாள். மேலும் பெண்ணுக்கு மாதவிடாய் வந்து விட்டால் அவள் அசுத்தமானவள், வீட்டையும் அவள் தொடும் பொருளையும் அசுத்தப்படுத்தி விடக் கூடியவன் எனவும் கருதுகிறார்கள். பெண்ணுக்கு சகோதரர்களிருந்தால் அவள் தன் தந்தையின் சொத்தில் சிறிதும் உரிமை பெற மாட்டாள் எனவும் கருதுகிறார்கள். கிறிஸ்தவர்கள் பெண்களை சாத்தானின் வாசலாகக் கருதுகிறார்கள். கிறிஸ்தவ அறிஞர்களில் ஒருவர் பெண் மனித இனத்தைச் சார்ந்தவளல்ல எனக் கூறினார். இன்னும்

புனித யூனபெஃன்துரா என்பவர் கூறினார் : நீங்கள் பெண்களைக் கண்டால் அவளை மனித இனத்தைச் சார்ந்தவள் எனக் கருதி விடாதீர்கள். அது மட்டுமல்ல அவளை ஒரு உயிருள்ள ஜீவனாகக் கூட கருதாதீர்கள். மாறாக நீங்கள் காண்பது நிச்சயமாக ஷைத்தானின் உருவத்தைத் தான். இன்னும் நீங்கள் செவியேற்கும் அவளது சப்தம் பாம்பின் சீற்றம் தான்.

மேலும் கடந்த 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை ஆங்கில பொதுச்சட்டப்படி பெண்கள் பிரஜா உரிமை கொடுக்கப்படாதவர்களாக இருந்தனர். இதுபோன்றே பெண்களுக்கென எநத தனிப்பட்ட உரிமைகளும் கிடையாது. இன்னும் அவள் அணியும் ஆடை உட்பட எந்தப் பொருளையும் சொந்தப்படுத்திக் கொள்வதிலும் உரிமையில்லை. 1567 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்துப் பாராளுமன்றம் பெண்களுக்கு எந்த அதிகாரமும் கொடுக்கக் கூடாதென சட்டம் இயற்றியது. இவ்வாறே எட்டாவது ஹென்றியின் காலத்தில் ஆங்கிலேயப் பாரளுமன்றம் பெண்கள் அசுத்தமானவர்கள் என்பதால் இன்ஜீலைப் படிக்கக் கூடாதென சட்டம் இயற்றியது.

பிரஞ்சுக்காரர்கள் 586 ஆம் ஆண்டில் பெண்கள் மனித இனத்தைச் சார்ந்தவர்களா? இல்லையா? என ஆய்வு செய்து முடிவெடுக்க ஒரு சபையை அமைத்தனர். அச்சபை பெண்கள் மனித இனத்தைச் சார்ந்தவர்கள் தான். எனினும் அவர்கள் ஆண்களுக்குப் பணிவிடை செய்வதற்காகவே படைக்கப்பட்டவர்களென முடிவு செய்தது. 1805 ஆம் ஆண்டு வரை ஆங்கிலேயரின் சட்டத்தில் ஒரு கணவன் தனது மனைவியை விற்பது கூடுமென்றே இருந்துள்ளது. மனைவியின் விலை ஆறு பெணி (அரை ஷில்லிங்) என நிர்ணயமும் செய்யப்பட்டது. (பெனி, ஷில்லிங் என்பது ஆங்கிலேய நாணயத்தின் பெயர்கள்).

இஸ்லாத்திற்கு முன்பு வரை அரேபியர்களிடத்தில் பெண்கள் இழிந்த பிறவிகளாக இருந்தனர். அவளுக்கு சொத்துரிமையோ, வேறு எந்த உரிமையோ கிடையாது. மட்டுமல்ல அவர்களில் பெரும்பாலோர் தம் பெண் மக்களை உயிருடன் புதைப்பவர்களாக இருந்தனர்.
இவ்வனைத்து அநியாயங்களைப் பெண்களை விட்டும் நீக்கவும், நிச்சயமாக ஆண்களும் பெண்களும் சமமானவர்கள் தாம் என விளக்கவும் தான் இஸ்லாம் வந்தது. எனவே ஆண்களுக்கு உரிமைகளிருப்பது போலவே பெண்களுக்கும் உரிமைகளிருக்கின்றன என்று கூறிவிட்டதோடு நில்லாமல், அவற்றைப் பட்டியலிட்டும் காட்டுகின்றது.

பெண்களின் விடுதலை இயக்கங்கள் வளர்ந்த வரலாறு

பிரிட்டன் :

கடந்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு தான் பிரிட்டடினில் பெண் விடுதலை மற்றும் உரிமை கோரிப் போராட பெண் விடுதலை இயக்கங்கள் தோற்றுவிக்கப்பட்டன. அவ்வாறு தோற்றுவிக்கப்பட்ட பெண் விடுதலை இயக்கங்கள் யாவும் பெண் என்பவள், பாலியல் நிலையில் அவளை ஒரு கீழ்த்தரமான இனமாக எண்ணி, சமூக, பொருளாதார, அரசியல் நிலைகளில் அவர்களை ஒதுக்குவதை எதிர்த்தும், இத்தகைய நிலைகளில் அவர்களுக்கு இழைக்கப்படும் சமூகப் பாகுபாடு, துரோகங்கள் ஆகியவற்றை எதிர்த்தும், ஆணும் பெண்ணும் சமம், ஆணைப் போலவே பெண்ணுக்கும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நிலைகளில் சம அந்தஸ்து வேண்டியும், இவற்றுக்கான சட்டப் பாதுகாப்பு வேண்டியும், இவற்றை பெண்ணினத்திற்குப் பெற்றுத் தரவும் தான் பெண்ணுரிமை இயக்கங்கள் தோற்றுவிக்கப்பட்டன.

1914-ஆம் ஆண்டு முதலாவது உலக மகா யுத்தம் தொடங்கியதால், போரின் போது நாட்டுக்கு உதவ வேண்டும் எனும் முடிவின் கீழ் போராட்டம் கைவிடப்பட்டு, யுத்தம் சம்பந்தமான தொழிற்சாலைப் பணிகளில் தம் ஒத்துழைப்பைத் தந்தார்கள். இதன் காரணமாக அரசாங்கத்தின் மூலம் தமக்கு ஏற்பட்ட எதிர்ப்பை மட்டுப்படுத்தி, தமக்கு சாதகமான சூழலை உருவாக்கினார்கள். இவர்கள் தொடர் போராட்ட முறைகளினால் 1918 ல் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு முதன் முதலாக ஓட்டுரிமை வழங்கப்பட்டது. 1928 ல் ஓட்டுப் போடும் வயது 21 ஆகக் குறைக்கப்பட்டது.

பிரிட்டன் நாடு ஒரு பெண்ணால் எலிசபெத் குடும்பத்தால் ஆளப்பட்டு வரும் ஒரு நாடு என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஒரு பெண் ஆளும் நாட்டிலே ஒரு பெண் ஓட்டுரிமை பெற்றுக் கொள்ள 2 நூற்றாண்டுகள் பிடித்துள்ளன. என்ன வேதனையான விசயம்! இவர்கள் தான் பெண்ணுரிமை பற்றிப் பேசும் பெண்களின் காவலர்கள்?!

அமெரிக்கா :

அமெரிக்காவைப் பொறுத்தவரை, பெண்களுக்கான இயக்கம் என்பது முதன் முதலில் 1848 ல் எலிசபெத் கேடி ஸ்டேன்டன் என்ற பெண்மணியால் துவங்கப்பட்டது. இங்கு 1848 ல் கூடிய மாநாட்டில் நீக்ரோ அடிமைகள் விடுதலைப் பிரகடனத்துடன் (அமெரிக்காவில் இன்றும் இவர்கள் அடிமைகளாகவே நடத்தப்படுகின்றார்கள். நிறவேற்றுமை, நிறவெறி கொண்ட வெள்ளை சமூகம் இவர்கள் இன்னும் அடக்கியாண்டு வருகின்றது மட்டுமல்லாமல் படுபாதகமாகவும் கொலை செய்யப்படுகின்றார்கள்).பெண் விடுதலை மற்றும் பெண்ணுரிமை சம்பந்தமான பிரகடனமும் வெளியிடப்பட்டது.

அதன் பின் 1850 ல் லூசி ஸ்டோன் எனும் பெண்மணியின் தலைமையின் கீழ் தேசிய பெண்கள் உரிமை மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. அதன் பின் மேற்கண்ட இரண்டு பெண்மணிகளின் அமைப்பும் ஒன்றிணைந்து சூசன் பி. அந்தோணி எனும் பெண்மணியின் தலைமையின் கீழ் பெண்களின் தேசபிமானிகள் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு, 1878 ல் பெண்களுக்கு ஓட்டுப் போடும் உரிமை வேண்டும் எனக் கோரி, அதைச் சட்டமாக்க கோரிக்கை அனுப்பினார்கள்.

அமெரிக்காவில் உள்ள மாநிலங்களில் வியோமிங் மாநிலம் தான் முதன் முதலாக 1890 ல் பெண்களை ஓட்டுப் போட அனுமதித்தது. அமெரிக்க தேசியப் பெண்களின் ஓட்டுரிமைக் கூட்டமைப்பு என்ற அமைப்பு 1900 ல் கேர்ரி ஜேப்மேன் காட் என்ற பெண்ணின் தலைமையில் இதன் செயல்பாடுகள் முடுக்கி விடப்பட்டன. இந்த அமைப்பு நடத்திய பல போராட்டங்கள், கூட்டங்கள், மாநாடுகள் பல படித்த பெண்களையும், உயர்வர்க்கப் பெண்களையும் கவர்ந்தது. அதே போல முழு நேர அரசியலில் ஈடுபடும் பெண்களையும், அமைப்புக்கான நிதிகளையும் அதிகரித்தது. இதன் காரணமாக பெண்களால் நடத்தப்படும் ஊர்வலங்களம், மாநாடுகளும் ஒவ்வொரு நகரிலும் அதிகமான அளவில் நடக்க ஆரம்பித்தன. மேலும் சூசன் அவர்களால் கொண்டு வரப்பட்ட பெண்ணுரிமை கோரும் சட்ட முன் வரைவு, 19 வது சட்ட வரைவு எனும் பெயரில் 1920 ல் அமெரிக்கப் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டு, அமெரிக்காவில் பெண்களும் ஓட்டுப் போடலாம் என்ற உரிமையை முதன் முதலாக அமெரிக்கப் பெண்கள் பெற்றார்கள். பெண்ணுரிமை சம்பந்தமாக முதன்முதலாக இயற்றப்பட்ட இந்தச் சட்டம் 1920 முதல் 1960 வரை பல பெண்ணுரிமை இயக்கங்கள் தோன்றக் காரணமாக அமைந்தன. இதில் முக்கியமானது 1920 ல் தோற்றுவிக்கப்பட்ட பெண் வாக்காளர்கள் சங்கம் மற்றும் 1935 ல் தோன்றிய தேசிய நீக்ரோ பெண்கள் பேரவை ஆகும்.

மேற்கண்ட குழுக்கள் பெண்ணுரிமை சம்பந்தமான பல்வேறு விதமான கோரிக்கைகளை முன் வைத்தும், ஆண் பெண் சமத்துவம் மற்றும் விடுதலை வேண்டியும் தம் போராட்டத்தை ஆரம்பித்தன. மேலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை வேண்டும் என்னும் கோரிக்கையை 1923 ல் தேசியப் பெண்கள் சங்கள் முன் வைத்துப் போராட ஆரம்பித்தது. இக்கோரிக்கை 50 வருடங்களாக செயலற்றதாகவே ஆட்சியாளர்களால் கிடப்பில் போடப்பட்டது.

மேற்கண்ட இத்தகைய பெண்களின் போராட்டம் உலக அளவிலும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. 1945 ல் நடந்த ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் பெண்ணுரிமை மற்றும் ஆண் பெண் சமத்துவம் பற்றி, அதன் முன்னுரையில் சுட்டிக் காட்டப்பட்டது. பின் 1948 ல் பெண்களின் நிலையை அறிய ஒரு கமிஷன் உருவாக்கப்பட்டது. 1952 ல் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் குழுவில் பெண்களின் அரசியல் உரிமைகள் பற்றி ஒரு கருத்தரங்கமும் நடத்தப்பட்டது.

மேலும் சிறுபான்மையினரின் உரிமைகள் மற்றும் இனப்பாகுபாடுகளுக்கு எதிரான சட்டம் இயற்றுகின்ற சாதகமான சூழல் உருவானதும் பெண்ணுரிமை இயக்கங்கள் வரை உற்சாகம் தந்துதவின. இதன் மூலம் தீவிர பெண்ணுரிமை இயக்கங்கள் வளர்ந்து, இவைகள் பெண்கள் அரசியல் உரிமை பெறுவதைக் காட்டிலும் சமூக அந்தஸ்து பெற வேண்டி தெளிவான இலக்கியம் மற்றும் தேவையான விளக்கங்கள் மூலமும் நடைமுறையில் உள்ள பெண்களுக்கு எதிரான நம்பிக்கைகள், நோக்கங்கள் ஆகியவற்றுக்கெதிரான பிரச்சாரம் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தின.

மேலும் 1980 லும் பின் 1990 லும் அதற்குப் பின்பும் பெண்ணுரிமை இயக்கங்கள் பெண்களின் பொருளாதாரம், அரசியல், சமூகத் தளங்களில் பெண்கள் முன்னேற்றம் காண வேண்டி தமது கவனத்தை ஒருமுகப்படுத்தின. இந்நிலையில் அவர்களது முக்கிய நோக்கம் ஆணுக்கும் பெண்ணுக்கும் சரிவிகித சம்பள அளவீடு வேண்டும் என்பதாக இருந்தது. இதில் அவர்கள் ஓரளவு வெற்றி கண்டாலும், இன்னும் அவர்கள் ஆணின் சம்பள விகிதத்தைக் காட்டிலும் பின்னடைந்தவர்களாகவே உள்ளனர். போராட்டம் தொடர்ந்து சில உரிமைகளைப் பெற்றாலும் சில நேரங்களில் ஆணுக்கு நிகராக பெண் உயர்வது மட்டுப்படுத்தப்பட்டுக் கொண்டே வருவதையும் பெண்கள் கவனிக்கத் தவறவில்லை.

ஒரு புறம் இவர்கள் ஆணுக்கு நிகராக உயர நினைத்தாலும் இயற்கையாகவே பெண்களின் உடலில் உள்ள தகவமைப்புகள் அதிக வேலைப்பளு, வீட்டுப் பொறுப்புகள், ஆண்வர்க்கத்தின் உதாசீனம் ஆகியவை அவர்களுக்கு வெறுப்புணர்வையே வளர்த்தன.

இவர்கள் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக எந்த சம உரிமை வேண்டும் என்பதற்காகவும், பெண்ணுக்கும் உயிர் உண்டு அவளும் ஒரு மனிதப் பிறவியே, ஆணுக்கும் உள்ளது போன்ற அரசியல், எழுத்துரிமை, பேச்சுரிமை, சொத்துரிமை போன்ற சமூக உரிமைகளும் வேண்டும் என தம் போராட்டத்தை தொடங்கினார்களோ அவற்றில் அவர்கள் ஓரளவு வெற்றி பெற்றாலும், இன்று அந்தப் போராட்டங்கள் வலுவிழக்கச் செய்யப்பட்டு திசை திருப்பப்பட்டுள்ளன. பெண்கள் அரை குறை ஆடை அணிவதும், அரங்குகளில் கவர்ச்சிகரமாக வலம் வருவதும் தான் சுதந்திரம் என்ற போதை பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடிய இவர்கள், இதுதான் உண்மையான சுதந்திரம் என அறிவிலிகள் போல் நடந்து வருகின்றனர்.

இவர்கள் தம்மையும் அறியாமல் ஆண்களின் வக்கிர கவர்ச்சி எண்ணங்களுக்கு இரையாக்கப்பட்டுக் கொண்டிருப்பதை அறியாமல், உண்மையான சுதந்திரத்தை மறந்த பேதைகளாக கவர்ச்சிப் பொம்மைகளாக வலம் வருகின்றார்கள். குறிப்பாக இதில் முஸ்லிம் பெண்கள் தம் அழகை வெளிக்காட்டாத முழு ஆடை (பர்தா) அணிவதையும், சமூக தளங்களில் ஆணின் காமப் பார்வையிலும், வஞ்சக வலையிலும் விழாமல் ஒதுங்கி தனித்துவமாக வாழ்வதையும் தான் முஸ்லிம் பெண்கள் அடிமைப்படுத்தப்படுகின்றார்கள் என இப்போலிப் பெண்ணியவாதிகள் கூச்சலிடுவதிலிருந்து, மற்ற பெண்கள் தாம் எடுத்துக் கொண்ட போராட்டத்திலிருந்து தவறி, ஆண்களின் சதிவலையில் வீழ்ந்து தம் நோக்கங்களிலிருந்து திசை திருப்பப்பட்டுள்ளார்கள் என்பதை உணரலாம்.
இதை கடந்த 30 ஆண்டுகளாக பெண்கள் சுதந்திரம் மற்றும் உரிமைக்காகக் குரல் கொடுத்து வரும் க்ரீர் அவர்களின் சமீபத்திய பேட்டி நிரூபிக்கின்றது. 1970-ல் இருந்து பெண் விடுதலைக்காகப் போராடி வரும் ஜெர்மைன் க்ரீர் (60) என்ற பெண்மணி, சமீபத்தில் லண்டனில் (மார்ச், 7, 1999) ல் நடந்த உலகப் பெண்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் பொழுது, இன்றும் பெண்கள் அடக்குமுறையில் இருந்தும், ஆணாதிக்கத்தில் இருந்தும் விடுபடவில்லை என்று கூறினார்.

இன்று குடும்ப வாழ்க்கையிலே பெண்கள், கொடூரமான முறையில் கணவனால் நடத்தப்படுகிறார்கள். வீட்டிலே அவர்களை எதையுமே எதிர்த்துச் செயல்படாத புழப் பூச்சிகளைப் போல நடத்தப்படுகிறார்கள்.

வெளியிலோ அவர்கள் ஆண்களின் குரூரமான இச்சைக்கும், பொழுது போக்கிற்காகவும், கவர்ச்சி காட்டும் அடிமைகளாகவும், கடைச் சரக்கிலோ கவர்ச்சி காட்டும் போதைப் பொருட்களாகவும் பயன்படுத்தப்படுகின்றார்கள்.

இவர் அரசியலையும் விட்டு வைக்கவில்லை. கடந்த தேர்தலின் போது பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் சில பெண்களை பாராளுமன்றத்துக்குக் கொண்டு வந்து, இடம் நிரப்பும் பணி என்பதை விட, அவரது கொள்கைகளைக் கண் மூடி ஆதரிக்கும், எதிர்த்துப் பேசாத ஒரு ஆட்டு மந்தைகளை உருவாக்கி வைத்துள்ளார் என்று விமர்ச்சித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் பிறந்த இவர் பிரிட்டிஷ் பல்கலைக்கழகம் ஒன்றில் பணியாற்றி இருக்கிறார். இவர் கூறிய கருத்துக்கள் ஏதோ அரபு நாட்டில் உட்கார்ந்து கொண்டு பேசவில்லை. மாறாக, பெண் விடுதலைக்காகவும், மதங்களின் அடக்குமுறைக்கு எதிராகப் போராடும் தஸ்லீமா நஸ்ரின்களுக்காகக் குரல் கொடுப்பதற்காகவே இருக்கிறோம் என மார்தட்டிக் கொள்ளும் உலகின் வளர்ந்த சமூகம் எனக் கூறிக் கொள்ளும் பிரிட்டனில் இருந்து பேசி உள்ளார் என்பது, அவர்களின் பொய் முகமூடியைக் கிழிப்பது போல் உள்ளது எனலாம்

Source: http://ourummah.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக