சனி, 16 ஏப்ரல், 2011

பதிவுத்துறை ஐ.ஜியை அவமதித்த சம்பவம்: பசுச்சாண தண்ணீர் தெளித்தது தடவியல் பரிசோதனையில் நிரூபணம்


திருவனந்தபுரம்:கேரள மாநில அரசின் பதிவுத்துறை ஐ.ஜி.யாக பதவிவகித்தவர் ஏ.கே.ராமகிருஷ்ணன். இவர் கடந்த மாதம் 31-ம் தேதி ஓய்வு பெற்றார். இவர் ஓய்வு பெற்றுச் சென்ற பின்னர் அவர் பயன்படுத்திய அறை, நாற்காலி, மேஜைகள்,வாகனம் ஆகியவற்றின் மீது சாணத் தண்ணீர் தெளித்து சக ஊழியர்கள் சுத்தம் செய்துள்ளதாகத் தெரியவந்தது.
இதுதொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையத்திடம் ராமகிருஷ்ணன் புகார் செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை போலீசார் விசாரணையை துவக்கினர். ஆரம்பக்கட்டமாக நடந்த தடவியல் பரிசோதனையில் அலுவலகத்திலும் அதன் சுற்றுப் பகுதிகளிலும் சாண தண்ணீர் தெளித்ததற்கான ஆதாரங்கள் கிடைத்தன. ஃபாரன்சிக் லேபிலிருந்து விரிவான பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன் இவ்வழக்கில் கூடுதல் விளக்கம் கிடைக்குமென துணைக்கமிஷனர் பி.கே.ஜகதீஷ் தெரிவித்துள்ளார்.
ஐ.ஜியின் அலுவலகத்தில் பணியாளர்கள் சிலரை மட்டுமே போலீஸாரால் விசாரிக்க முடிந்தது. தொடர்ந்து வந்த நாட்களில் விடுமுறையானதாலும், அலுவலகத்தில் ஊழியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டதாலும் அதிகமான நபர்களை விசாரிக்க இயலவில்லை. வரும் தினங்களில் அனைத்து ஊழியர்களிடமிருந்தும் வாக்குமூலம் பெறப்படும்.
ஏ.கே.ராமகிருஷ்ணன் அளித்த புகாரில் இச்சம்பவத்தின் பின்னணியில் செயல்பட்டவர்களைக் குறித்து குறிப்பிடவில்லை. சாண தண்ணீரை தெளித்து அவமானப்படுத்தியுள்ளதாக மட்டுமே புகாரில் கூறப்பட்டுள்ளது. ஆதலால் குற்றவாளிகளைக் குறித்த விபரங்கள் ஒன்றும் கிடைக்கவில்லை என போலீசார் கூறுகின்றனர்.
விரிவான விசாரணைக்கு பிறகு அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். ஆரம்பக்கட்ட விசாரணையின் அடிப்படையில் நீதிமன்றத்தில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் விசாரணை நடத்தி குற்றவாளிக்கெதிராக நடவடிக்கை மேற்கொள்ள உள்துறை செயலாளர் கெ.ஜெயகுமார் எ.டி.ஜி.பி மஹேஷ்குமார் சிங்களாவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கெ.ஜெயகுமர் தெரிவித்துள்ளார். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த நபரை மனோரீதியாக கொடுமைக்கு ஆட்படுத்தியதாக சுட்டிக்காடி எஸ்.ஸி-எஸ்.டி சட்டத்தின் 3(1), (10) ஆகிய பிரிவுகளின்படி வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

thoodhuonline.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக