செவ்வாய், 26 ஏப்ரல், 2011

மோடி ஆட்சியில் தொடரும்வரை பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காது – காங்கிரஸ்


புதுடெல்லி:கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடுத்து குஜராத் மாநிலம் முழுவதும் முஸ்லிம் சமுதாயத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரமான இனப் படுகொலைக்கு மோடி உடந்தை என மூத்த போலீஸ் அதிகாரி சஞ்சீவ் பட் குற்றஞ்சாட்டியிருந்தார். இதுத்தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அவர் ஏப்ரல் 14-ம் தேதி நேரடியாக பிரமாணப் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்தார். இத்தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் மோடிக்கெதிரான தாக்குதலை காங்கிரஸ் கட்சி வலுப்படுத்தியுள்ளது. மோடி ஆட்சியில் தொடரும் வரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்காது என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: ‘பிரமாணப் பத்திரத்தில் ஐபிஎஸ் அதிகாரி கூறியுள்ள சில விவரங்கள் பத்திரிகைச் செய்திகளின் வாயிலாக வெளியாகியுள்ளன.
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடுத்து குஜராத்தில் கலவரம் ஏற்பட்டபோது, முதல்வராக இருந்த நரேந்திர மோடி 2002 பிப்ரவரி 27-ம் தேதி காவல் துறை உயரதிகாரிகள் கூட்டத்தை நடத்தினார்.
அப்போது “இந்துக்கள் தங்களின் ஆத்திரத்தை வெளிப்படுத்த அனுமதியுங்கள்; முஸ்லிம்களுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும்; வன்முறையாளர்களை அடக்க வேண்டாம்’ என்று போலீஸ் உயரதிகாரிகளிடம் மோடி கூறியதாக அந்த பிரமாணப் பத்திரத்தில் சஞ்சீவ் பட் குறிப்பிட்டுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 இந்த பிரமாணப் பத்திரம் மூலம் நரேந்திர மோடி எப்படிப்பட்டவர் என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்.
 அவரிடம் இருந்து நீதி, நேர்மையை நம்மால் எப்படி எதிர்பார்க்க முடியும்? இந்த விஷயத்தில் பாஜக மேலிடம் நாட்டு மக்களுக்கு என்ன கூறப்போகிறது? என்றார் அவர். குஜராத்தில் நடந்தது கலவரமல்ல.அது ஒரு அரச பயங்கரவாதம் என்பது அனைவருக்கும் தெரியும்.மோடிக்கு புகழாரம் சூட்டுபவர்கள் அவருக்கெதிராக வெளியாகியுள்ள புதிய தகவல்களை கவனிக்கவேண்டும்.
உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாண பத்திரத்தை வாசித்துப் பார்க்கவேண்டுமென மனீஷ் திவாரி ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
சஞ்சீவ் பட் தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தில் கூறப்பட்டுள்ள தகவல்களுக்கு மோடியும், பா.ஜ.கவும் பதில் கூறவேண்டுமென காங்கிரஸ் கட்சியின் குஜராத் மாநில தலைவர் அர்ஜூன் மோத்வாடியா வலியுறுத்தியுள்ளார்.

நன்றி: தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக